கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், “ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.
இல்லையில் விஜய் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் மாவட்டம் தோறும், தொகுதிகள் தோறும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாகவே இந்த வாரத்திற்குள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும், மௌன அஞ்சலி செலுத்தியும் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டத்தை நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்து நினைவேந்தல் கூட்டம் நடத்த அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.