அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கிரீன்வேஸ் சாலை  இல்லத்தில் இன்று காலை பாமக  அன்புமணி சந்தித்துப் பேசினார். 

Advertisment

இந்த சந்திப்பில் அதிமுக – பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி  செய்யப்பட்டது.

Advertisment

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ’’வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும். 

எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பியவாறு இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதேபோல பாமகவும் அவர்களின் தொண்டர்கள் நிர்வாகிகள் விரும்பியவாறு இரண்டு கட்சியில் இருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் இணைந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி.

Advertisment

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கின்ற ஒரு அரசாக, எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக   தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக, பாஜக, பாமக மூன்று கட்சிகளும் இணைந்து தேனீக்களைப்போல இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு எங்கள் கூட்டணியில் தற்போது பாமக இணைந்திருக்கிறது. தொகுதியின் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவற்றை பிறகு அறிவிப்போம்…’’ என்றார். 

இதையடுத்து பேசிய பாமக  அன்புமணி, ‘’இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி.  

மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள் தொழிலாளர்கள் என அத்தனை உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரான திமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்க இருக்கின்றோம். 

சமீபத்தில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. தேர்தல் எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக  எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்…’’ என்றார்.