'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'அரசியல் போராட்டங்களை வாக்கு தளத்தில் தான் தீர்க்கப்பட வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் அல்ல. இதற்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் தவறான புரிதலோடு மனுவைத் தாக்கல் செய்ததன் காரணமாக சி.வி. சண்முகம் தரப்பிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''வரவேற்கத் தகுந்த ஒன்று. அவர்கள் ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவினுடைய பெயரை அவர்கள் வைத்தார்கள். ஆனால் சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் நாங்கள் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தோம். அதையும் ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. திருப்பி அனுப்பினார். அதற்கும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் போராடினோம். திமுக தலைவர் கலைஞருக்காக மட்டுமல்ல மற்ற ஜெயலலிதாவிற்காகவும் நாங்கள் அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடிப் பெற்ற இயக்கம் தான் திமுக. எங்களுக்குக் கட்சி வேறுபாடுகள் கிடையாது.
எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க வேண்டுமோ பெயர் வைக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதையெல்லாம் விமர்சித்த சி.வி.சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது வரவேற்கத் தகுந்த ஒன்று'' என்றார்.