தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்துள்ளார். 

Advertisment

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மத்திய அமைச்சர் பி.யூஸ்ஸ் கோயல் இன்றைய தினம் நாங்கள் (அதிமுகவினர்) சந்தித்துப் பேசினோம். கிட்டத்தட்டத் தமிழகத்தில் இருக்கின்ற நிலவரங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும். 

Advertisment

அதற்கான திட்டங்களை வகுக்க நாங்கள் இப்போது ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்றைக்குத் தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு கொந்தளிப்போடு இருக்கின்றார்கள். இந்த திராவிட முன்னேற்ற ஆட்சியை அகற்றப்பட வேண்டும். அதற்கு உண்டான நடவடிக்கையை அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலிலே அதிமுக, பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.