கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (12.12.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் இருந்தும், த.வெ.க தரப்பில் இருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் நடைமுறையில் தவறு உள்ளதாகக் கருதுகிறோம். அதாவது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை விசாரிக்கும் நிலையில் பிரதான அமர்வு எப்படி விசாரித்தது?” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், “இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் இது குறித்து விவாதிக்கலாம். எனவே இது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Follow Us