அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
'திமுக கூட்டணிக் கட்சிகள் திமுகவின் அடிமைக் கட்சிகள் ஆகிவிட்டன' என எடப்பாடி பழனிசாமி அண்மையில் பேசியிருந்தார். இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் பதிலளித்திருந்தன. இதுகுறித்து விசிகவின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் இருந்து எங்க கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது அவராக சொல்லுகின்ற ஒரு கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்வதை அவர் திருப்பிச் சொல்லுகிறார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது'' என தெரிவித்திருந்தார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 'இந்தியா கூட்டணியை எவராலும் தகர்க்க முடியாது' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏனைய திமுக கூட்டணி கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில் (18-07-25) அன்று இரவு வேளாங்கண்ணி பகுதிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்குள்ள உள்ள தனியார் விடுதியில் தங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று (19-7-25) காலை வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். வேதாரண்யத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
'கூட்டணி குறித்து அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னீர்கள், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்னீர்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது. என்ன முதலமைச்சர் இப்படி கேட்கிறார் என்று. அதிமுக எங்க கட்சி. நாங்க யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் விருப்பம். நீங்க ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் ஏன் கதறுகிறீர்கள்? என்று சொன்னவுடன் ஸ்டாலின் அமைதி ஆகிவிட்டார். திமுக ஆட்சியை அகற்ற பாஜக எங்களோடு இணைந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல' என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
ஆட்சிஅதிகாரத்தில் பங்கு:
ஆட்சி அதிகாரத்திற்கு பங்கு என்ற கருத்தை விசிக வைத்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் தங்களுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். 'பாமக வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பதோடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது நம் உரிமை அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கூட்டணியில் இடம் பெறுவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.