'சாட்சிகள் பயத்தில் இருக்கிறோம்; நீதிமன்றத்தை நாடுவோம்'-வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் பேட்டி

a4287

'We are afraid ; we will approach the court' - Video interview with Saktheeswaran Photograph: (sivakangai)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 01.07.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.  இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் அஜித்குமாரை சுற்றி நின்று தாக்குவதை கோவிலின் கழிவறையிலிருந்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர் நேற்று வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கி உள்ளார்.

வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் என்பவர் தமிழக டிஜிபிக்கு இமெயில் மூலம் கடிதம் கொடுத்துள்ளார். அதில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா பல ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த 28ஆம் தேதி ராஜா தன்னை மிரட்டியுள்ளார். எனவே எனக்கும் என் குடும்பத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சக்தீஸ்வரன்,''முதலில் நவீனுடைய குடும்பத்திற்கு உரிய  பாதுகாப்பு வேண்டும். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தேவை இல்லை. அந்த பசங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அஜித் குமாருடன் பயணித்த பசங்க கண்ணு முன்னாடி நடந்த விஷயங்களை சொல்லி விட்டார்கள். நானும் சொல்லி இருக்கிறேன். அதில் பசங்க ரொம்ப பயந்து போயிருக்கிறார்கள். இன்கிளுடிங் நானும் பயந்து போய் இருக்கிறேன்.

எனக்கும் தூக்கம் வரவில்லை. நீதி வழங்கக்கூடிய தெய்வமாக மடப்புரம் காளியம்மன் இருக்கிறார். அங்கேயே இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறது. இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனக்கஷ்டம் ரொம்ப இருக்கிறது. அஜித்குமாரை காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் எங்களிடம் இருக்கிறது. வீடியோ எடுக்கும் பொழுது உள்ளே ஒருவர் வருவதைப் போல தோன்றியது. எனவே அங்கிருந்து நான் வெளியே வந்து விட்டேன். மிளகாய் பொடி யார் வாங்கி கொடுத்தது, என்ன நடந்தது எல்லாமே தெரியும். அதை வாங்கி கொடுத்தவர்கள் யார் என்று தெரியும். அதெல்லாம் நான் விசாரணையில் சொல்லி விட்டேன்'' என்றார்.

மதுரைகிளை உயர்நீதிமன்றம் சாட்சிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் இதுவரை சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதால் நீதிமன்றத்தை நாடுவோம்' என சக்தீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

incidnet lock up police viral video thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe