சென்னை பூந்தமல்லியில் உள்ள சென்னீர்குப்பம் - ஆவடி சாலையில் இன்று (31.07.2025) காலை தண்ணீர் லாரி தாறுமாறாக ஓடியது. அச்சமயத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் மீது இந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சிக்கி இருவர் படுகாயம் அடைந்தனர். அதில் பலத்த காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது.
அதோடு அங்கு நடந்து சென்றவர்கள் மீதும் தண்ணீர் லாரி பயங்கரமாக மோதியது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் லாரியின் ஓட்டுநரை மடக்கிப் பிடித்து அவரை கம்பத்தில் கட்டி வைத்தனர். ஓட்டுநர் லாரியை இயக்கிய போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
தாறுமாறாக ஓடி தண்ணீர் லாரி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த யாமினி என்பவரின் 10 வயதுக் குழந்தை சௌமியா கடந்த ஜூன் மாதம் (18.06.2025) இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.