ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து 103 அடியை எட்டியது. பின்னர் மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

Advertisment

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99. 17 அடியாக குறைந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இன்று காலை அணைக்கு 436 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,800 கன அடி திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.இதைப்போல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவான 41.75 அடியை எட்டியது. இதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதைப்போல் பெரும்பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணையின் முழு கொள்ளளவான 30.71 அடியை எட்டி அணை நிரம்பியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 28.77 அடியாக உள்ளது.

Advertisment