Water released at Sathanur Dam - Warning to people along the Thenpennai coast Photograph: (THIRUVANNAMALAI)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அதிகபட்சமாக ஒன்பதாயிரம் கனஅடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.