தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஆற்றின்  நீர்பிடிப்பு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக ஒகேனக்கல் காவிரி காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. அதாவது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.  

Advertisment

இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.