தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று விஜய் தரப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ''கரூர் மக்களோடு கலந்து அவர்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களையும் கேட்டு பெற்று செயல்படுவது தொடங்கி, படிக்கின்ற மாணவச் செல்வங்கள் தொடங்கி அனைவருக்கும் என ஒரு பொது நபராக மக்களிடத்தில் அன்பையும் மதிப்பையும் பெற்று ஒரு சிறப்பான பணிகளை முன்னெடுக்கக்கூடிய அந்த வேளையில் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் என்பது நடந்திடாத சம்பவம். எனவே இனி வரக்கூடிய நாட்களில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் கரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கும் நடைபெறாத அளவிற்கு அனைவரும் சேர்ந்து இதற்கான முயற்சிகளை நடத்திட வேண்டும்.
கடந்த மூன்று நாட்களாக இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்வதிலும், அவருடைய இல்லங்களுக்கு சென்று ஆறுதல் சொல்வதிலும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் எங்களுடைய முழு கவனமும் அமைந்திருந்தது. முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்து கொடுத்துவிட்டு வந்துள்ளோம். ஏறத்தாழ முதலில் 116 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு இறப்புகள் எண்ணிக்கை கூடிய நிலையில் 108 பேர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இப்பொழுது ஐந்து பேர் கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையிலும் இரண்டு பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரைவில் அவர்களும் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இந்த துயர சம்பவம் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான ஒரு துயர சம்பவம். இந்த நிகழ்வில் கட்சிகள் பார்க்காமல், இயக்கங்கள் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மக்களுக்கு உதவிய தருணமாக அமைந்திருக்கிறது. பொதுவாக அரசியலாக பார்க்கவில்லை. தயவு செய்து மனிதாபிமானத்துடன் பாருங்கள். என்னைப் பொறுத்தவரை கரூரில் உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வகையிலும் நான் நேரடியாக இந்த குடும்பத்துடன் தொடர்பு உள்ளவன்.
குறித்த நேரத்தில் அந்த கூட்டம் நடந்திருந்தாலும் நான்கு மணிக்கு சொல்லி 5 மணிக்கு கூட்டம் நடந்திருந்தாலும் இது போன்ற பெரிய அசம்பாவிதம் நடந்திருக்காது என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது. அன்று கரூரில் சம்பள நாள் டெக்ஸ்டைல் வேலை செய்பவர்கள் வேலை முடிந்து சம்பளம் வாங்கும் நேரம். கொத்தனார், சித்தாள் வேலைக்கு செல்வோர் கூட சம்பளம் வாங்கிக் கொண்டு வீடுகளுக்கு செல்லக்கூடிய நேரம். காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும், அரசு கேட்கக்கூடிய இடங்களை கொடுக்கும் இதனை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அங்கு அவ்வளவு காலணிகள் கிடந்ததே ஒரு வாட்டர் பாட்டில் கிடந்ததா? குடிநீர் வசதியை ஏன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. விஜய் என்னைப்பற்றி பேசிய போது காலணி வீசியதாக அவதூறு பரப்புகின்றனர். அங்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல யாருக்கும் கட்டுப்படாத கூட்டம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை திசை திருப்பி மடைமாற்றம் செய்ய முயன்றால் மக்கள் ஏமாற மாட்டார்கள்''என்றார்.