mdmk Photograph: (durai vaiko)
திருச்சியில் ஒரு ரயில்வே கிராஸிங்கில் குரல் எச்சரிக்கை சாதனத்தில் தமிழ் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுவதை அறிந்து தமிழிலும் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பும் வகையில் சரி செய்ய கோரிக்கை வைத்திருப்பதாக மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பு இல்லாத காரணத்தினால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியும், அலைபேசி வாயிலாக அழைத்து அதன் விபரங்களையும் அவசரத்தையும் எடுத்துக் கூறி, விரைந்து அதனை சரி செய்ய கேட்டுக் கொண்டேன்.
தமிழில் எச்சரிக்கை இல்லாததாலும், வேற்று மொழியில் அவை ஒலிபரப்பப்படுவதாலும் நேரும் ஆபத்தை உணர்ந்து கொண்ட கோட்ட மேலாளர் அதை உடனே சரி செய்வதாக உறுதியளித்தார்' என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Follow Us