தி.மு.க.வின் தென்மண்டல பொறுப்பாளரான எம்.பி. கனிமொழி வாக்கு திருட்டு பற்றிய விழிப்புணர்வை தொண்டர்களிடையே ஏற்படுத்தி உஷார்படுத்தியும் வருகிறார். செப். 12 அன்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.வின் பாக முகவர்கள் எனப்படும் பூத் கமிட்டியினரின் கூட்டம் மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பூத் கமிட்டியினரும், அக்கட்சியின் நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர். இதில் கனிமொழி எம்.பி. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மாவட்டக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
அதில் பேசிய கனிமொழி எம்.பி., “இந்தியாவிலேயே கூட்டணி உடையாமல் இருக்கும் மாநிலம் தமிழ்நாட்டின் தி.மு.க. கூட்டணி தான். இந்தக் கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலை கவனமாக சரியாக நாம் நடத்துவோம் என்று சொன்னால் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். நாடு முழுவதும் நாட்டு மக்களை எல்லாம் ஒரு சந்தேகத்தோடு தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய ஒரு சூழலில் நம்மை ஒன்றிய பா.ஜ.க. வைத்திருக்கிறது. அந்த எண்ணத்தோடு கவனமாக விழிப்போடு நாம் இந்தத் தேர்தலை அணுக வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எத்தனையோ முதலீடுகளைக் கொண்டு வந்து தொழில் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே 42 சதம் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத ஒரு திட்டம். தன்னுடைய ஒவ்வொரு சாதனையையும் தானே முறியடிக்கக்கூடிய ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். கடந்த 4 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது போல இருந்துவிட்டு இப்போது தேர்தல் வருகிறது என்றதும் உடனே எழுந்து மக்களைப் பார்க்க வருகின்றனர். அவர்கள் மக்களை மறந்துவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பாக முகவர்களின் பொறுப்பு மிக மிக முக்கியமானது. ஏனெனில் பல தேர்தல்கள் தேர்தல் கமிஷனை வைத்தே வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது பல தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
பல ஆயிரம் ஓட்டுகள் காணாமல் போயிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பூத்களிலும் பெயர்களை நீக்கி தங்களுக்கு வேண்டிய பெயர்களைச் சேர்த்து குழப்பங்களை உருவாக்கி தேர்தல் வெற்றிகளை மாற்றிக்கொண்டிருக்கக் கூடிய சூழல் நாடு முழுவதும் இருக்கிறது என்ற அச்சம் எல்லா மக்களுக்கும் இருக்கிறது. எனவே பரபம்பரை எதிரிகளும் பாரம்பரிய எதிரிகளும் இணைந்து நமக்கு எதிராக வரக்கூடிய தேர்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள்தான் இதில் பொறுப்புடனும் கவனமாகவும் செயல்பட வேண்டும். நீங்கள்தான் இதன் அச்சாணி போன்றவர்கள். ஒவ்வொரு பூத்களிலும் வாக்களர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் சரிபார்ப்பதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்து எச்சரிக்கையோடு உஷார் படுத்தினார் கனிமொழி.
கனிமொழியிடம் மனு கொடுத்த தி.மு.க.வின் மூத்த முன்னோடியும் கட்சியின் பேச்சாளருமான குருசாமி பாண்டியன், நான் கட்சியின் முன்னோடி. எனக்குத் தொழில் கடன் கேட்டு அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பினேன் அவைகள் கண்டுகொள்ளப்படவில்லை. நீங்கள் உதவ வேண்டும் என்று அவர் சொன்னதையடுத்து அவரிடம் கனிவாகப் பேசிய கனிமொழி தன் உதவியாளர்களிடம் அந்த மனுவைக் கொடுத்து உடனடியாக கவனிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். தேர்தல் களம் சூடேரிக்கொண்டிருக்க, தி.மு.க.வின் பூத் கமிட்டி கட்டமைப்புகளும் அதன் அச்சாணியும் ஓசையின்றி உரமேற்றப்பட்டு வருகின்றன. வாக்கு திருட்டு பற்றி நெல்லையில் காங்கிரஸ் நடத்திய மாநாடு தென்மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.