காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2024-இல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2023-இல் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக முறைகேடுகளைச் செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சூழலில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைக் கண்டித்து, பீகாரில் நடைபெறவுள்ள சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (Special Intensive Revision - SIR) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் ஆகஸ்ட் 17 முதல் பீகாரில் பேரணியைத் தொடங்கினார். 1,300 கிலோமீட்டர் தொலைவு கடந்த இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு நேற்று (01.09.2025) பாட்னாவில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். பாட்னாவில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை, அம்பேத்கர் பூங்காவில் நிறைவடைந்தது.
எனினும், டாக் பங்களா கிராசிங்கில் காவல்துறையினரால் யாத்திரை பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், “காந்தியைக் கொன்ற சக்திகள் இன்று அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றன. ஆனால், பா.ஜ.க. அரசியலமைப்பை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த யாத்திரைக்கு மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பெருந்திரளான மக்கள் பங்கேற்று, வாக்குத் திருட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பா.ஜ.க. ஆதரவாளர்கள் எங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர்.
ஆனால், நான் பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அணுகுண்டை விடப் பெரியது ஹைட்ரஜன் குண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? கர்நாடகாவின் மகாதேவபுராவில் நாங்கள் ஒரு ‘அணுகுண்டை’ (வாக்குத் திருட்டு ஆதாரங்கள்) காட்டினோம். இப்போது, ஒரு ‘ஹைட்ரஜன் குண்டு’ (மேலும் பெரிய ஆதாரங்கள்) வரவுள்ளது. பாஜகவினர் தயாராக இருங்கள். விரைவில் வாக்குத் திருட்டு குறித்த முக்கிய உண்மைகள் வெளிவரும். இது வெடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடியால் மக்கள் முன் முகத்தைக் காட்ட முடியாது,” என்று உறுதியாகக் கூறினார்.