தனது முதல் சுற்றுப்பயணத்திற்காக இன்று(13/09/2025) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் சுற்றுப்பயணம் காரணமாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்துள்ள இடத்திற்கு வந்து சேரவே இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்பதால் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/13/a5206-2025-09-13-12-40-45.jpg)
இந்நிலையில் விஜய் பேசவுள்ள மரக்கடை பகுதியில் காலையில் இருந்தே தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பலர் மரம் மற்றும் கட்டிடங்கள் மீது ஆபத்தை உணராமல் ஏறி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யை பார்க்க வேண்டும் என கட்டிடத்தின் மீது ஏறிய இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். திருச்சி விமானநிலையத்தில்ருந்து மரக்கடை வரை இதுவரை கூட்ட நெரிசலால் 60க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.