Volunteers narrowly escape death at Tvk conference - Shocking drone footage Photograph: (tvk)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை (21-08-25) நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு தவெக கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன.
சுமார் 1 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு நாளை மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதால் மாநாட்டு இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை தவெக நிர்வாகிகள் இரவு பகலாக செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்றே மதுரைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழ் விழுந்ததால் தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாளைய தவெக மாநாட்டில் விஜய் கொடியேற்ற ஏதுவாக 100 அடி கொடிக்கம்பம் நடும்பணி இன்று தீவிரமாக நடைபெற்றது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்ட போது திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. மேலும், 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்து கார் மீது விழுந்ததில் அங்கிருந்த தவெகவினர் பதறி அடித்து ஓடினர்.
30 டன் எடையை கையாளும் திறன் கொண்ட கிரேன் இருந்தும் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் மீது விழுந்த தவெக கொடிக்கம்பம் சுமார் 10 டன் எடை கொண்டதாகவும், நட் போல்டுகளை சரியாக பொருத்தாததாலும் கொடிக்கம்பம் கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் ட்ரோன் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பலர் நூலிழையில் உயிர்த் தப்பிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.