congress Photograph: (tvk)
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளதோடு அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் விஜய்யை ஆதரிக்கும் வகையில் எக்ஸ் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் 'மத்திய அரசின் சென்சார் போர்டு ஜனநாயகன் படத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றிபெற முடியாது' என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் படத்தில் நடித்த விஜய்யை தவிர அனைவரும் மத்திய அரசின் தணிக்கை குழுவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் சிலர் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக இலை மறை காய் மறையாக செய்திகள் உலா வந்தது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவான ராகுல்காந்தியின் இந்த பதிவு தற்போது பேசு பொருளாகி உள்ளது. பள்ளி பொன்விழா நிகழ்விற்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல்காந்தி சந்தித்து கூட்டணி நிலவரம் குறித்து பேச உள்ளதாகவும் மறுபுறம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us