Viral video of 83-year-old man celebrating Pongal with his daughter on a bicycle Photograph: (pongal)
கடந்த சில வருடங்களாக தை திருநாளான பொங்கல் நேரத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி ஒரு தந்தை மகள் பாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தது அந்த வீடியோ. அந்த வீடியோ தான் தொடர்ந்து பல வருடங்களாக பொங்கல் நேரத்தில் அதிகம் பார்க்கவும் பகிரவும் செய்யும் வீடியோவாக உள்ளது.
அப்படி என்ன வீடியோ அது. 83 வயது தந்தை தன் மகளுக்கு தனது சைக்கிளில் மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம் என பொங்கல் பொருட்களும் தலையில் கரும்புக்கட்டும் வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ தான் அது. இந்த 2026 லும் அதேபோல தான் தனது பாச மகளுக்கு பொங்கல் சீர் கொண்டு போய் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு வரும் முதல் தை திருநாளுக்கு பொங்கல் பானை, அடுப்பு, மஞ்சள், காய்கறி, கரும்பு என அத்தனை பொருட்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்று தலைவரிசை கொடுத்து வருகின்றனர். இந்த நாள் புதுப்பெண்ணுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதேபோல் தான் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 83 வயது விவசாயி செல்லத்துரை தனது மகள் சுந்தரம்பாளை 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்தார். பல வருடங்கள் குழந்தையில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருந்தது. 12 வருடங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்து அனைவரையும் சந்தோசப்படுத்தியது.
அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தனது மகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதை மறப்பதில்லை தந்தை செல்லத்துரை. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டுக்கு சைக்கிளில் பொங்கல் சீர் கொண்டு போன வீடியோ தான் வைரலானது. அதே போல இந்த ஆண்டும் தனது மகளுக்கு சீர் கொடுக்க அனைத்துப் பொருட்களையும் வாங்கி சைக்கிளில் கட்டி தொங்கவிட்டவர் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு, ஒரு கட்டு கரும்பை தூக்கி தனது தலையில் வைத்துக் கொண்டு தனது 'குலதெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு' அசால்ட்டாக 17 கி மீ சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து திரும்பியுள்ளார்.
இதுபற்றி செல்லத்துரை கூறும்போது, ''என் மகளை திருமணம் செஞ்சு கொடுத்து 12 வருசம் குழந்தை இல்லை. அதுக்கப்பறம் இரட்டை குழந்தை பிறந்தது. பொங்கல் வரப் போகுதுன்னாலே என் மகளும் பேரக்குழந்தைகளும் ரொம்ப ஆவலோடு காத்திருப்பாங்க. சீர் கொடுக்கப் போறோம்ன்னாலே நல்லபடியா போய் வரனும்னு 3 நாள் விரதம் இருந்து வழக்கம் போல சைக்கிள்ல எல்லாத்தையும் வச்சுக்கும் தலையில கரும்பு கட்டு வச்சுக்கிட்டு போய் சைக்கிளை நிறுத்தும் போது அவங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமக்கும் வருஷம் முழுவதும் தோட்டத்தில் வேலை செஞ்சு கிடைக்கிற மகிழ்ச்சியைவிட இந்த ஒரு நாள் சீர் கொடுக்க போய் வருவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். 83 வயதானாலும் உடம்பில் தெம்பிருக்கு சைக்கிள் ஓட்றேன்'' என்றார்.
எத்தனை வசதிகள் இருந்தாலும் தாய் வீட்டு சீர் வரும் போது அத்தனை மகள்களும் மகிழ்ச்சியில் குழந்தைகளாக மாறித்தான் விடுகிறார்கள். தந்தை செல்லத்துரை கொண்டு வந்த சீரைப் பார்த்து ஆனந்த கண்ணீர் கசிந்ததாம் மகள் சுந்தரம்பாளுக்கு.
Follow Us