விழுப்புரம் நகரப் பகுதியான மேலத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவரின் மகன் மோகன்ராஜ் (வயது 17) . இவர் திரு.வி.க. நகர் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் வழக்கம் போல் இன்று (13.08.2025) பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். இதனையடுத்து அவர் வகுப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். அச்சமயத்தில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு இருக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இது தொடர்பான சிசிடி காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதாவது மாணவன் மோகன்ராஜ், இருக்கையில் அமரும் போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அருகில் இருந்த மாணவர்கள் அவரை உடனடியாக மீட்டுள்ளனர். அதோடு பள்ளி வகுப்பு ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் விழுப்புரம் 4 வழிச் சந்திப்பில் உள்ளா ய தனியார் மருத்துவமனையில் மோகன் ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மோகன்ராஜுக்கு உடலில் ஆக்சிஷன் அளவு குறைவாக இருப்பதால் உடனடியாக முண்டியமாக்கம் மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
அதன்படி முண்டியமாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மாணவரை அழைத்து வரும் போது வழியிலேயே மானவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவனின் உயிரிழப்பு குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.