வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் வன கோட்டத்திற்குட்பட்ட சிந்தன கணவாய் வனப்பகுதியில் யானை ஒன்று கடந்த சில நாட்களாக தனியாக நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த யானை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து அங்கு வனத்துறையினர் அங்கே சென்றனர். வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக் குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உதவியுடன் வனப் பகுதியில் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரோத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தண்ணீர் குடிக்க ஓடைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக கற்கள் நிறைந்த பாறையின் அருகே வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்து இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என வனத்துறையினர்  தெரிவிக்கின்றனர். இதனிடையே இது, உண்மைதானா எனத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகிறார்கள். காரணம், கடந்த மாதம் பேரணாம்பட்டு அருகே அரவட்டலா வனப்பகுதியில் ஒரு யானை உயிரிழந்துப்போய் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது. அது எப்படி இறந்தது எனத் தெரியவில்லை. ஒரே பகுதியில் ஒருமாத இடைவெளியில் இரண்டு யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த வனப் பகுதியில் அடிக்கடி ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் வனக் கொள்ளையர்கள் உள்ளே சுற்றிக்கொண்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் தகவல் கூறுகின்றனர்.  இதனை வனத்துறையினர் சரியாக கண்டு கொள்ளவில்லை, அவர்கள் யாராவது இந்த யானையை கொன்றார்களா என்பதை கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர். வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் சென்று வனவிலங்குகளுக்கு ஏற்ற போர் தண்ணீர் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அப்படி தண்ணீர் இல்லாததால் தான் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வரும் நிலை ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் வனவிலங்குகளுக்கு ஏற்ற குடிநீர் குட்டைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் வைக்கின்றனர். பேரணாம்பட்டு  வனப்பகுதியில் ஒரே மாதத்தில் இரண்டு யானைகள் வெவ்வேறு வனப்பகுதிகளுக்குள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது.