எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள், இளம் ஜோடிகளை காளை மாட்டை போல் கழுத்தில் கயிற்றை கட்டி கலப்பையை இழுத்து வயலில் உழ வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டம் கஞ்சமஜிரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர், பெண்ணின் தந்தை வழி அத்தைப் பையன் என்பதால் இந்த திருமணத்திற்கு சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உள்ளூர் பழக்க வழக்கங்களின்படி அத்தகைய திருமணம் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழக்க வழக்கத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள், அந்த ஜோடிக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கலப்பை ஒன்றை தயார் செய்து எருதுகளைப் போல் அவர்களின் கழுத்தை கயிற்றை கட்டியுள்ளனர். மேலும், அவர்களை எருதுகளை போல் விவசாய நிலத்தில் உழ வைத்து தண்டனை கொடுத்துள்ளனர். அதன் பின்னர், தம்பதியினரை கிராம கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் ஒழுக்கத்தை மீறி நடந்துள்ளனர் என்று அவர்களுக்கு சுத்திகரிப்பு சடங்கு செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆண் பெண் இருவரையும் கலப்பை நுகத்தில் கட்டி வயலில் உழ வைத்து, அவர்களை குச்சியால் இரண்டு ஆண்கள் அடிக்கின்றனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மாவட்ட போலீசார் தலைமையில் ஒரு குழு கிராமத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதிய பாகுபாடு மற்றும் பழமையான வழக்கத்தை தூக்கிப்பிடித்து தொடர் வன்முறை நடைபெற்று வருவது கண்டனத்துக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.