பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். ஒருபுறம், ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவுடன் இணைந்து நிற்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மறுபுறம், மாநில அரசின் மீதுள்ள அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அதே வேளையில் பீகாரில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நடந்து வருவதாக வரும் தகவல்கள் அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாநில அரசு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநில அமைச்சர் ஒருவரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சாலை விபத்தில் இறந்த 9 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவிக்க பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் எம்.எல்.ஏவுடன், ஜோகிபூர் மலாவன் கிராமத்திற்கு சென்றார். குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்த போது, ஆத்திரத்தில் இருந்த கிராம மக்களில் சிலர் அமைச்சர் ஷ்ரவன் குமார் மற்றும் எம்.எல்.ஏவை தாக்கினர். உடனடியாக அவர்கள் இருவரும் தங்களது காரில் ஏறினர். இருப்பினும் கிராம மக்கள் மூங்கில் குச்சிகள் மற்றும் கற்களை கொண்டு 1 கி.மீ வரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்த முயன்றனர். இந்த தாக்குதலில், அமைச்சரும், எம்.எல்.ஏவும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பினர். ஆனால், இச்சம்பவத்தில் ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. அமைச்சரின் காரை கிராம மக்கள் துரத்திச் சென்று தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறுகையில், ‘நாளந்தாவில் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் இறந்த பிறகு, இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றேன். அனைவருக்கும் சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளையும் அழைத்துச் சென்றேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு நான் புறப்படவிருந்தபோது, ​​சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலர் இந்த விவகாரம் மேலும் மோசமடைய வேண்டும் என்றும், ஒரு சர்ச்சை வெடிக்க வேண்டும் என்றும் விரும்பினர். ஆனால் நான் அங்கிருந்து அமைதியாகச் சென்றேன்” என்று கூறினார்.

Advertisment

வன்முறை குறித்த தகவல்களைப் பெற்ற பிறகு, அப்பகுதியில் உள்ள பல காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, பாட்னாவில் பீகார் சுகாதார அமைச்சரும் பாஜக தலைவருமான மங்கள் பாண்டேவின் காரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.