மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு ஒரு பெண்ணின் தலைமுடியை வெட்டி, ஆடைகளை கழற்றி உடல் முழுவதும் மிளகாய் பொடியை தூவி கொடூரமாகத் தாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே யாத்கீர் மாவட்டத்தில் உள்ள ஹுனசாகி கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான நபர். இவருடைய முதல் மனைவி இறந்த பிறகு திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு திரும்பும் போதெல்லாம் பெண்ணின் மருமகன், தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து வந்துள்ளார். இதில் பெண்ணின் கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகித்து கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு திவ்யாவை அவரது மருமகன் அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் திவ்யா, தனது கணவர் மற்றும் மருமகனுடன் தனது வீட்டில் பேசி கொண்டிருந்தார். அப்போது அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து திவ்யாவை கொடூரமாகத் தாக்கினர். மேலும் அவர்கள், திவ்யாவின் தலைமுடியை வெட்டி, அவரது ஆடைகளை அகற்றி, அவர் மீது மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர். திவ்யாவின் கணவரும், மருமகனும் இதனை தடுத்த போது அவர்களையும் அடித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், திவ்யாவை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து இழுத்து வந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை கண்ட மற்ற கிராமவாசிகள் உடனடியாக அவர்களை தடுத்து திவ்யாவுக்கு உதவியுள்ளனர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய சம்பவத்தில், சுமார் 5 பெண்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment