வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் பாயும் பொன்னை ஆற்றில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் கால்வாயில் நீர் வரத்து இருப்பதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இதனால் திருவலத்தை சேர்ந்த சிலர், தனிப்பட்ட முறையில் (சட்டவிரோதமாக) மணல் மூட்டைகளை கால்வாய்க்கு குறுக்கே அடுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திருவலம் கம்பராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (52) என்பவர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு சிக்கியுள்ளார். அவரை காட்பாடி தீயணைப்பு துறையினர் சுமார் 8 மணி நேரமாக தேடி சடலமாக மீட்டனர்.

Advertisment

பின்னர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரண வழங்க வேண்டும் எனக் கூறி மீட்கப்பட்ட சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டு உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

இது குறித்து திருவலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பிற்கு காரணமான கால்வாய் முறையாக கட்டப்படவில்லை என்றும், கால்வாய்க்கு அடியில் கட்டுமான பொருட்கள் அகற்றப்படவில்லை, முறையாக கேட்வால்வு அமைக்கப்படவில்லை இதனை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.