Madhya pradesh CM Mohan yadav
மத்தியப் பிரதேசத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது இரண்டு லட்டுகளுக்குப் பதிலாக ஒரு லட்டு மட்டுமே கிடைத்ததாக கிராமவாசி ஒருவர் முதலமைச்சரின் உதவி எண்ணை அழைத்து புகார் அளித்த சம்பவம் அனைவரும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நாடு முழுவதும் நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் பிந்த் மாவட்டம், மச்சந்த் பகுதியில் உள்ள நெளதா கிராமத்தில் கிராம பஞ்சாயத்து சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுதந்திர தினக் கொண்டாடப்பட்டது. கிராம பஞ்சாயத்து பவனில் கொடியேற்றும் விழாவில் கிராமத் தலைவர், உள்ளூர் பிரதிநிதிகள், செயலாளர் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கொடியேற்றப்பட்ட பிறகு கிராம பஞ்சாயத்து சார்பில் அனைவருக்கும் லட்டு விநியோகம் செய்யப்பட்டது. அனைவரும் லட்டுகளை வழங்கிக் கொண்டிருந்த கிராம பஞ்சாயத்தில் வேலை பார்க்கும் பியூன் தர்மேந்திரா, கிராமவாசியான கமலேஷ் குஷ்வாஹாவுக்கு ஒரு லட்டு கொடுத்தார். இருப்பினும் கமலேஷ் தனக்கு இரண்டு லட்டு கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தர்மேந்திரா இரண்டு லட்டுகளை கொடுக்க மறுத்துவிட்டார். இதில் மன உளைச்சல் அடைந்த கமலேஷ் உடனடியாக முதலமைச்சரின் உதவி எண்ணை அழைத்து இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரில், ‘சுதந்திர தின நிகழ்ச்சிக்குப் பிறகு கிராம பஞ்சாயத்து லட்டுகளை விநியோக்கவில்லை’ என்று கூறப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
இது குறித்து தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த கமலேஷ், ‘கிராம பஞ்சாயத்து பவன் கொடியேற்றிய பிறகு லட்டுகளை விநியோக்கவில்லை. பஞ்சாயத்து பவனுக்குள் அமர்ந்திருந்த சிலருக்கு லட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், சாலையில் வெளியே நின்றவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. சுதந்திர தினத்தன்று லட்டுகள் விநியோகிக்கப்படுகிறதா என்று கேட்க நான் முதல்வர் ஹெல்ப்லைனை மட்டுமே அழைத்தேன், ஏனெனில் அவை விநியோகிக்கப்படவில்லை. முதல்வர் ஹெல்ப்லைன் எனது புகாரைப் பதிவு செய்துள்ளது’ என்று கூறினார். இது குறித்து பஞ்சாயத்து செயலாளர் ரவீந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கமலேஷ் பஞ்சாயத்து பவனுக்கு வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தார். பியூன் தர்மேந்திரா லட்டுகளை விநியோகித்து ஒன்றைக் கொடுத்தார். அவர் இரண்டு லட்டுகளை விரும்பினார், ஆனால் தர்மேந்திரா மறுத்துவிட்டார். அதனால்தான் அவர் முதல்வர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர் முதல்வர் ஹெல்ப்லைன் மூலம் பல்வேறு துறைகளில் டஜன் கணக்கான புகார்களை அளித்துள்ளார். நான் 1 கிலோ லட்டு வாங்கி, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரை சமாதானப்படுத்த முயற்சிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.