இந்தியா முழுவதும் வரும் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண் கொடுத்த சாபத்தால், கிராம மக்கள் பல ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடாமல் விதிமுறைகளைப் பின்பற்றி வரும் விநோத சம்பவம் நடந்து வருகிறது. ஹிமாச்சலப் பிரதேசம், ஹமிர்புர் மாவட்டத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் பல ஆண்டுகளாக பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
அதாவது கிராமவாசிகளின் கூற்றுப்படி, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் மன்னரின் படையில் இருந்த ஒரு போர் வீரன் தீபாவளி பண்டிகை நாளில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்து மரக்கட்டைகளை வைத்து அவரின் உடல் எரிக்கப்பட்டது. அப்போது மனமுடைந்த அவரின் கர்ப்பிணி மனைவி, கணவரின் தகன நெருப்பில் விழுந்து தன்னைத் தானே எரித்துக் கொண்டார். அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பு, கிராம மக்கள் ஒருபோதும் தீபாவளியைக் கொண்டாட முடியாது என்று சாபம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அந்த நாளை கொண்டாட முயற்சிக்கும் போதெல்லாம், யாராவது இறந்துவிடுவார்கள் அல்லது கிராமத்தில் ஏதேனும் பேரழிவு ஏற்படுகிறதாக கிராமவாசிகள் நம்புகின்றனர். அதனால், இந்த சாபத்தின் வெளிப்பாடாக பல ஆண்டுகளாக கிராம மக்கள் யாரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை. சடங்குகள் மூலம் சாபத்தை நீக்க பல முயற்சிகளை கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அவை அனைத்து வீணாகிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிராமவாசிகள் ஒரு பெரிய யாகம் நடத்தினர். ஆனால், சாபத்தின் சக்தி இன்னும் பற்றிக் கொண்டுள்ளதால் அந்த யாகம் தோல்வியில் முடிந்துள்ளது.
அதனால், கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதையே தவிர்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது, விளக்குகளை ஏற்றுவதில்லை, பட்டாசு வெடிப்பதில்லை, சிறப்பு உணவுகளை சமைப்பதில்லை. அதற்குப் பதிலாக வீட்டிற்குள் இருந்து கொண்டே சதி உருவத்தை வணங்குகிறார்கள். குறிப்பாக இந்த சாபம் நீண்ட ஆண்டுகளாக இருப்பதால், பலர் தீபாவளி நாளில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் நடைமுறை, நாளை மறுநாள் கொண்டாடவிருக்கும் தீபாவளிக்கும் கடைபிடிக்க இருக்கிறார்கள்.