உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிஷோர்புரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் கிணற்றைப் பார்த்தபோது, அதில் அடையாளம் தெரியாத மனித உடல் ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கிஷோர்புரா கிராம மக்கள், டோடி ஃபதேபூர் (Todi Fatehpur) காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிணற்றிலிருந்து அந்த உடலை மீட்டனர். அந்த உடலின் தலை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், உருவ அமைப்பை வைத்து அது பெண்ணின் உடல் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் வைத்தே பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் நடத்தினர்.
இந்தச் சம்பவம் ஜான்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கினார். மேலும், 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இறந்த பெண் யார்?, எதற்காகக் கொல்லப்பட்டார்? யார் கொலை செய்தது? என்ற கேள்விகளுடன் தனிப்படை போலீசாரின் விசாரணை நீண்டது.
இந்தச் சூழலில், பக்கத்து கிராமமான மஹேவாவைச் சேர்ந்த ரச்னா யாதவ் என்ற 35 வயது பெண் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. விசாரணையை ரச்னா யாதவை மையப்படுத்தி ஆரம்பித்த காவல்துறையினர், அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டத் அரம்பித்தனர். அதில், முன்னாள் கிராமத் தலைவர் 41 வயதான சஞ்சய் படேலுக்கும், ரச்னா யாதவிற்கும் பழக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, காவல்துறையினர் சஞ்சய் படேலைப் பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்களும் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் வெளிவந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரச்னாவிற்கும் சஞ்சய் படேலுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது. மேலும், இந்த உறவின் காரணமாக, ரச்னா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, 20 லட்ச ரூபாய் பணம், ஒரு வீடு, மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டு வறுபுறுத்தியிருக்கிறார் ஆனால், சஞ்சய் படேலுக்கு அதில் உடன்பாடு இல்லை. இருப்பினும், ரச்னா தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால், சஞ்சய் படேல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
இது சரிபட்டு வராது; ரச்னாவின் கதையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்த சஞ்சய் பட்டேல், தனது மருமகன் சந்தீப் பட்டேல் மற்றும் அவரது கூட்டாளி தீபக் அஹிர்வார் ஆகியோருடன் சேர்த்து கொலை திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறது. அதன்படி, ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு, சஞ்சய் படேல், ரச்னாவைத் தனது இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர், அங்கு வந்த ரச்னாவை, மருமகன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து சஞ்சய் படேல் காரில் கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர் காரிலேயே வைத்து, ரச்னாவின் கழுத்தை நெறித்து கதையை முடித்திருக்கின்றனர்.
பின்னர், அடையாளம் தெரியாமல் இருக்க, கோடாரியால் ரச்னாவின் தலை மற்றும் கால்களைத் துண்டித்துள்ளனர். அதையடுத்து, உடலை கிஷோர்புரா கிணற்றிலும், தலை மற்றும் கால்களை அருகிலுள்ள ரைவான் ஆற்றிலும் வீசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரைவான் ஆற்றிற்குச் சென்று பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர், முன்னாள் கிராமத் தலைவர் சஞ்சய் படேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் படேல் ஆகியோரைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தீபக் அஹிர்வாரைத் தேடி வருகின்றனர். மேலும், அவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் பி.பி.ஜி.டி.எஸ். மூர்த்தி, "காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்ட விசாரணைக்குப் பிறகு இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரைத் தேடி வருகிறோம். மேலும், இந்த வழக்கில் 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குத் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொதுமக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்," என்று கூறினார்.
முன்னாள் கிராமத் தலைவர், தனது மருமகனுடன் சேர்ந்து பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை ஆற்றிலும் கிணற்றிலும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.