Village girls' Koppi Kottal festival - The women who taught Photograph: (pongal)
'கொப்பிக் கொட்டல்' என்பது 'கும்மியடித்தல்' என்று பொருள். கிராமங்களில் தை திருநாளை வரவேற்க கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்கும் நிகழ்வாகத்தான் பெண் குழந்தைகளுக்கு கும்மியடிப்பதை கற்றுக் கொடுக்கும் விதமாக கொப்பிக் கொட்டல் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த மரபு மாறிப்போய்விடாமல் தொன்று தொட்டு வர வேண்டும் என்பதால் தான் ஊரைக் காக்கும் கொப்பியம்மன் வழிபாடாக கொண்டாடி வருகின்றனர் செரியலூர் கிராமமக்கள். அதேபோல, கொப்பிக் கொட்டல்' என்பது குறிப்பிட்ட திருவிழா நடக்கும் இடத்தின் பெயராகவும் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் தான் தைப்பொங்கலுக்கு மறுநாள் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்கள் விரதமிருந்து வீட்டு வாசலில் வெற்றுப் பொங்கல் வைத்து, கூடவே ஆவாரம்பூ, கூழைப்பூ, அருகம்புல், இன்டன்காய், பிரண்டை, வேப்பிலை, கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் 92 பிள்ளையார்கள் பிடித்து வீட்டு வாசலில் வைத்து படையலிட்டு ஒரு படையலை பனை ஓலை பெட்டியில் வைத்து கிராமத்தின் தெற்கு இருந்தும் கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் ஒன்று கூடி பெண்களும், குழந்தைகளும் கும்மியடித்து, ஊர்வலமாக ஊரின் மையப் பகுதியில் ஒன்று சேர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள், பெண் குழந்தைகள் ஓலைப் பெட்டிகளை தலையில் சுமந்து சென்று தீர்த்தான் ஊரணிக் கரையில் இறக்கி வைக்க அங்கு கிராமத்தின் சார்பில் பெரிய படையல் போட்டு தீபம் காட்டிய பிறகு கலைந்து செல்கின்றனர்.
இது குறித்து கிராமத்தினர் கூறும்போது, 'சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு இந்த கிராமத்தில் வாழ்ந்த தீத்தான், காத்தான் என்ற சகோதரர்களில் ஒருவரது குழந்தை மற்றொருவர் வீட்டிற்கு காட்டு வழியாகச் சென்று வீடு திரும்பவில்லை. பிறகு அந்தக் குழந்தை கடுமையான அம்மை நோயால் பாதிக்கப்பட்டு நடுவழியில் இறந்து போனதால் அந்த பெண் குழந்தையை நினைவு கூறவும் இனிமேல் அம்மை நோயால் ஊரில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் கிருமிநாசினிகளான மாட்டுச் சாணம் முதல் பச்சிலைகள், பூக்களை வைத்து படையலிட்டு சின்ன பெண் குழந்தைகளை வைத்து வழிபாடு செய்வது காலங்காலமாக வழக்கமாக உள்ளது. இது ஒருபக்கம் வழிவழியாக வந்த செய்தியானாலும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தில் இதுவும் ஒன்றாக உள்ளது.
மேலும், ஒருபக்கம் முன்னோர்கள் இப்படி கதையாக எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் கூட அந்த செவிவழிச் செய்தியில் சொல்லப்படும் தீத்தான்-காத்தான் என்பவர்களின் பெயர்களின் இன்றும் குளங்கள் உள்ளதால் இப்படி இருவர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று சான்றாக உள்ளது. அதே போல கிராமத்தின் மேற்கில் இருந்து வரும் பெண்கள், பெண் குழந்தைகள் பழமையான பாலை மரத்தடியில் இன்று வரை ஒன்று கூடுவதும் உள்ளது. அதேபோல நமது பண்பாட்டில் கும்பியடித்தல் உள்ளது. அதன் மற்றொன்று தான் கொப்பி கொட்டல். அந்த கொப்பி கொட்டல் என்ற பழமையான பெயர் எங்கள் இன்றும் எங்கள் கிராமத்தில் நிலைத்திருக்கிறது எங்களுக்கும் பெருமையாக உள்ளது.
இதே போல வடகாடு கிராமத்தில் ஆண்களின் கோட்டத்துடனும், மறமடக்கியில் பெண்களின் கும்மி, சிலம்பத்துடனும் கொப்பித் திருவிழா நடக்கிறது. இதேபோல தமிழகத்தில் வெவ்வேறு பெயர்களில் இந்த விழாக்கள் வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது' என்றனர்.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, விழாக்கள் எல்லாமே அர்த்தமுள்ளது தான்.
Follow Us