கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர், புத்திராம்பட்டு கிராமத்தில் தங்கராசு மகன் பொன்னையனுக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக 4000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜிடம் பொன்னையன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று லட்ச ஒழிப்புத்துறையினரின் அலோசனையின் படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் கோமதி பிடித்து கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையின் கிராம நிர்வாக அலுவலர்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை களமிறங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழ்நாடு முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் என்பவர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்.
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உட்பட பல்வேறு சான்றிதழ்களைப் பெற வேண்டுமென்றால், மக்கள் வருவாய்த் துறையைத்தான் அணுக வேண்டும். ஆனால், வருவாய்த் துறையில் லஞ்சம் தந்தால்தான் 90% ஊழியர்கள், அலுவலர்கள் பணியாற்றும் சூழ்நிலையில் உள்ளனர். லஞ்சம் தரவில்லை என்றால், அந்த மனுவைக் கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனால், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் அலையும் பொதுமக்களும் உள்ளனர். இது குறித்து தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு புகார் சென்றதால், கடந்த சில மாதங்களாக வருவாய்த் துறையைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.