சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 12 அன்று காலை, சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம நிர்வாக அலுவலர்கள், சார்-ஆட்சியர் கிஷன் குமாரை சந்திக்கச் சென்றபோது, 8 பேர் மட்டும் உள்ளே வரலாம், மற்றவர்கள் வெளியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சார்-ஆட்சியர் அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இணைந்து, பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்: கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன; கிராம நிர்வாக அலுவலகங்களில் சமூகவிரோதிகள் மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், மது பாட்டில்களை உடைத்து விட்டுச் செல்லுதல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர்கள் மீது, அவர்களது கோட்டத்திலேயே, அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சமூகவிரோதிகளால் தாக்குதல்கள் நடைபெறுகின்றன, எனவே பாதுகாப்பு சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை; பொதுமக்கள் அமர நாற்காலி வசதிகள் இல்லை; கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் அறிக்கை அளித்தும், நேரடி விசாரணைக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் அழைக்கப்படுவதால் நேர விரயமும், தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது, இதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின் மாற்ற இயலாத நிலையில் பல சங்கடங்களை அனுபவிக்கின்றனர், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஆகஸ்ட் 12, 2025) காலை, சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை மனுவுடன் சார்-ஆட்சியர் கிஷன் குமாரை சந்திக்கச் சென்றனர். அப்போது, சார்-ஆட்சியர் 8 பேர் கொண்ட குழு மட்டும் மனு கொடுக்க வரலாம், மற்றவர்கள் வெளியில் இருக்க வேண்டும் என்று கூறியதால், கிராம நிர்வாக அலுவலர்கள் அவரது அறைக்கு முன் தரையில் அமர்ந்து, சார்-ஆட்சியர் கிஷன் குமாரைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடலூர் மாவட்ட வருவாய் துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.