Vijay's tour- release date and location? Photograph: (tvk vijay)
அண்மையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 30/08/2025 அன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் டெல்டா மற்றும் தெற்கு மண்டல மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்பிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதானமாக விஜய்யின் சுற்றுப்பயணம், அதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பிற கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு மூன்றிலிருந்து நான்கு ஒன்றியச் செயலாளர்கள் இருப்பார்கள். அதைக் காட்டிலும் வலுவாக உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்ற அளவில் பொறுப்புகளை அமைத்திட கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. செப்டம்பரில் விஜய்யின் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாக 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர்களை நியமிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது .
இந்நிலையில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தன்னுடைய சுற்றுப்பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் இந்த சுற்றுப்பயணம் மூன்று கட்டமாக, மொத்தமாக 10 வாரம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.