தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “இந்த அரசியல் பயணத்தில் மிக மிக மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நான் ஏன் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்றேன் என்றால், ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா நமக்கா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போகிற ஆளா நான்? இந்த முகத்தை பார்த்தால் அப்படியா தெரிகிறது. அப்படியெல்லாம் நடக்காது. அதுவும் முக்கியமா நம்மகிட்ட அதெல்லாம் நடக்கவே நடக்காது. ஆனால் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால் அழுத்தம் இருக்கிறது தான். நமக்கு இல்லை, மக்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டை இதற்கு முன்னால் ஆண்டவர்களும் பா.ஜ.கவுக்கு அடிமையாக தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசும் நமக்கு ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அவர்கள் மாதிரி இன்னும் சொல்லப்போனால் இன்னும் ஒருபடி மேல் மோசமாக இருக்கிறது. அவர்களாவது நேரடியாக பா.ஜ.கவிடம் சரண்டர் ஆகி இருப்பார்கள். இவர்கள் மறைமுகமாக சரண்டர் ஆகி இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்

Advertisment

திமுகவின் வேஷம் கலைந்துவிட கூடாது என்பதற்காக கலர் கலராக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள். நமக்காக உண்மையாக உழைப்பதற்கு யாராவது வர மாட்டார்களா என்று மக்கள் ஒருவிதமான வெளியில் சொல்ல முடியாத அழுத்தத்தில் இருக்கிற நேரம் இது. மாறி மாறி ஒட்டு போட்ட மக்கள், இப்போது நம்மை நம்புகிறார்கள். நம்மை நம்புகிறவர்களுக்கு நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அப்படி என்றால் இது மிக மிக மிக முக்கியமான காலகட்டம். அதனால் தான் அவ்வளவு அழுத்தமாக சொன்னேன். இந்த தேர்தல் கூட்டணி பற்றி நிறைய ஜோஷியங்கள் நடக்கிறது. விஜய் இப்போது தான் வந்திருக்கிறார், அவர்கூட யார் வரபோகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது என்ன புதுசா? 30 வருடமாக நம்மை குறைத்து தான் மதிப்பிட்டு தான் இருக்கிறார்கள். ஆனால், மக்கள் சரியாக மேலே தூக்கி ரொம்ப அழகா, ரொம்ப அக்கறையாக, தெளிவாக நமக்கான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். என் கேரியரின் உச்சமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதை இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், விஜய் நம்ம பிள்ளை, நம்ம அண்ணன், நம்ம தம்பி என்று மனதில் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அப்படி ஒரு இடத்தை கொடுத்து உள்ளன்போடு அள்ளி அரவணைத்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி நம்மை நம்புகிறவர்களுக்காக நாம் உழைப்பதே ஒரு பழக்கமாகி பழக்கமாகி அதுவே என்னுடைய ஒரிஜினல் கேரக்டராகவே மாறிவிட்டது. இத்தனை வருடமாக இருக்கிற அந்த உழைக்கிற குணம், அது எப்படி மாறும். அதெல்லாம் மாறவே மாறாது. அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் சரி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததற்கு பிறகும் சரி, இதற்கு முன்னாடி இருந்தவர்கள் மாதிரியோ அல்லது இப்போது இருக்கிறவர்கள் மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா கூட தொட மாட்டேன். எனக்கு அதை தொட வேண்டிய அவசியமே இல்லை. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு துளி ஊழல் கரை படியவே படியாது, படியவும் விடமாட்டேன். இதென்ன சினிமாவா என்று நீங்கள் கேட்கலாம். பிராக்டிலா இது பாசிபள் இல்லை தான். ஆனால், இது செயல்முறை தான். எதற்குமே ஆசைப்படாத ஒருவன், அரசியலுக்கு வருகிறான் என்றால், அவன் கண் முன்னாடி ஏதாவது ஒரு தவறோ, ஊழலோ நடக்கிறது என்றால் அதை பார்த்துவிட்டு சும்மா இருக்கமாட்டான்.

Advertisment

அதனால் இந்த தீய சக்தியாக இருக்கட்டும், இந்த ஊழல் சக்தியாக இருக்கட்டும், இரண்டு பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது. அப்படிப்பட்ட இந்த கட்சிகளை உண்மையாக தில்லாக எதிர்க்கிற தைரியமும் கெத்தும் நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போவதற்கோ அண்டி பிழைப்பதற்கோ அடிமையாக இருப்பதற்கோ நாம் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கு யார் என்ன தீங்கு செய்தாலும் அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்” என்று கர்ஜித்துப் பேசினார்