Vijay's photo in Sengottaiyan's shirt pocket instead of Jayalalitha's
முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன், தனது சட்டை பாக்கெட்டில் நீண்ட காலமாக வைத்திருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றி இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் கடந்தாண்டு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கூட்டாக பங்கேற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். அதன் பிறகு பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அப்போது தனது சட்டை பாக்கெட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். தவெகவில் இணைந்ததற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்துவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், தவெகவில் ஜனநாயகம் இருக்கிறது என்றும் இங்கு யார் புகைப்படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் ஒருவேளை ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றினால் இத்தனை நாள் அதிமுகவில் இருந்துவிட்டு திடீரென ஜெயலலிதாவின் புகைப்படத்தை தூக்கி வீசிவிட்டார் என என்னை விமர்சனம் செய்வார்கள் என்றும் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று வேலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையனின் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா புகைப்படத்துக்கு பதிலாக விஜய் புகைப்படம் இருந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us