தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (20.09.2025) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் அடுக்கி இருந்தார்.

Advertisment

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு விஜய்யின் குற்றச்சாட்டு குறித்த பேச்சுக்கு பதிலளிக்கையில், ''நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் பேசுவதை நீங்களே பார்க்கும் பொழுது தெரியும் அங்கிள், சிஎம் சார் என்று சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். விஜய்யின் வார்த்தையில் அகந்தை இருக்கிறது. அது இருக்கக் கூடாது. எங்கிருந்து அந்த அகந்தை வருகிறது தெரியவில்லை. ஏனென்றால் புஸ்ஸி ஆனந்திற்கு கட்சி ஆரம்பிக்க சொன்னது அமித்ஷா தான். வருமான வரித்துறையின் இணை இயக்குநராக இருந்த அருண்ராஜ் அவரிடம் இருக்கிறார். அவர்களின் தொடர்பில் ஒன்றிய ஆட்சியில் இருக்கின்ற அமித்ஷா, மோடியின் கைடன்ஸ் உடன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் என பல பத்திரிகைகளில் செய்திகள் சொல்லப்படுகிறது. அதனால் தான் அவர்கள் ஒய் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக ஒரு விமானமே கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன்.

இந்த தைரியத்தில் அந்த அகந்தையில் பேசுவதாக பல பேர் சொல்கிறார்கள். அதற்கு உதாரணம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த எனக்கு இவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா இங்கே வந்தால் இப்படி ஒரு கண்டிஷன் போட முடியுமா? சார். போட்டு பாருங்க என்று சொல்வதில் இருந்தே தெரிகிறது அவர்கள் தான் விஜய்யை இயக்குகிறார்கள் என்று'' என்றார்.