அண்மையில் நிகழ்ந்த கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தவெகவின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். 'நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்களை குழந்தைகளை மீட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதல் தலைவர் வரை அனைவரும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஓடிவிட்டனர்.
மொத்த உலகமே இதற்கு சாட்சியாக உள்ளது. தவெக தலைவரும் நடிகருமான விஜயிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லாததால் தொண்டர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். தனக்கு பின்னால் வந்தவர்களைப் பற்றி துளியும் கவலை கொள்ளாமல், அவர்களை மறந்து விட்டார். இந்த இழப்பிற்கு முழுக்க முழுக்க தவெகவினரே பொறுப்பேற்க வேண்டும்' என தவெக கட்சியை லெப்ட் ரைட் வாங்கினார்.
மேலும், விஜய் பயணித்த பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்? விஜய்க்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடைகோரி விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அந்த மனுவில் பல தகவல்கள் சொல்லப்பட்டாலும் விஜய்யின் தலைமைப் பண்பு குறித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவெக வைத்துள்ளது. அதற்கு காரணமாக போலீசார் நடத்திய தடி அடியால் தான் மக்களை தவெகவினர் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. உயிரிழப்பு குறித்து கட்சியின் தலைவர் விஜய்க்கு தெரியாது. கரூர் எல்லைக்குச் சென்ற பிறகே போலீசார் நடத்திய தடியடி பற்றி கட்சியின் பொதுச்செயலாளருக்கு தெரியவந்தது என தவெக தரப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.