Vijay's gathering in Erode - Sengottaiyan's intensity increases Photograph: (tvk)
அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு வந்த செங்கோட்டையனுக்கு, அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்சி பணியில் செங்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், பல்வேறு கட்சியினர் த.வெ.க.வில் இணைவதாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
Advertisment
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையத்தில் 16 -ந் தேதி நடிகரும் தவெகவின் தலைவருமான விஜய் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டு, அனுமதி கேட்கப்பட்டது. இடம் குறுகியதாக இருப்பதாக கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க.,வினர் மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து, அதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் 29 ஏக்கரில் பொதுக்கூட்டம் நடத்த இடத்தை தேர்வு செய்து, அங்கு கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கடிதம் அளித்து இருந்தனர்.
Advertisment
இந்நிலையில் ,பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் சார்பில் 84 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தனர். நிபந்தனைகளை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால் 16-ம் தேதிக்கு பதிலாக 18ம் தேதி இந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் 84 நிபந்தனைகளுக்கான ஆவணங்களை 90 சதவீதம் பூர்த்தி செய்து த.வெ.கவினர் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர். ஆனால்,போலீஸ் தரப்பில் இருந்து இன்னமும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
போலீசார் அனுமதிக்காக த.வெ.கவினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரு வேளை போலீஸ் தரப்பில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்ற உதவியை நாட முடிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் எப்படியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்து விடும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரூரில் 41 பேர் விஜயின் கூட்ட நெரிசலில் நசுங்கி செத்த சம்பவத்திற்கு பின் இருமாதமாக விஜய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
அதன் பிறகு காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி கடந்த 2 நாட்களுக்கு முன் பொதுக்கூட்டத்தில் போலீசாரின் கடும் நிபந்தனைகளுடன் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு, தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் நடிகர் விஜய் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன், மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து மிக கவனத்துடன் செய்து வருகிறார்.
இங்கு நடைபெறும் கூட்டம் மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் செய்து வருகிறார். மேலும், வாகனத்தில் நின்றபடி விஜய் பேசும் இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விஜய் 18ம் தேதி பங்கேற்க உள்ள பொதுக் கூட்டத்துக்கான அனுமதி கிடைக்குமா ? என்ற எதிர்பார்ப்பில் த.வெ.க.வினர் காத்துக் கொண்டுள்ளனர்.
Follow Us