சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு வழக்கானது மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அண்மையில் மரணமடைந்த கோவில் பாதுகாவலர் அஜித்குமார் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவி வழங்கியிருந்தார். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு நிதியுதவி வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்புகள் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.