'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 7.7.2025 முதல் 21.7.2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும்' என அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 07.07.2025 அன்று மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழகத்தில் 234 தொகுதி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு போகின்ற பொழுது அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளோம். எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்த பயணத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளோம். விஜய் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்திருப்பது அவருடைய முடிவு'' என்றார்.
'பாஜக உடன் கூட்டணி வைப்பது அரசியல் ஆதாயத்திற்கானது' என்ற விமர்சனத்தை விஜய் வைத்துள்ளார் என்ற கேள்விக்கு, 'ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விமர்சனம் செய்கிறது. அதன் அடிப்படையில் அவர் செய்திருக்கிறார். எல்லா கட்சிகளுமே விமர்சனம் செய்கின்ற கட்சிகள் தான். எந்த கட்சி விமர்சனம் செய்யாத கட்சி. திமுக விமர்சனம் செய்யவில்லையா; விடுதலை சிறுத்தைகள் விமர்சனம் செய்யவில்லையா; காங்கிரஸ் விமர்சனம் செய்யவில்லையா. எல்லா கட்சிகளும் தங்களை வளர்ப்பதற்காக விமர்சனம் செய்வது ஒரு இயல்பு'' என்றார்.
நடைப்பயண துவக்க விழாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, ''மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். அந்த நோக்கத்தில் யார் யாரெல்லாம் திமுக அகற்றப்பட வேண்டும் என எண்ணுகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்பது தான் எங்களுடைய கருத்து. சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் போகும்போது அஜித்குமாரின் தாயார் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/05/a4314-2025-07-05-12-53-28.jpg)