தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பா.ஜ.க என யாரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு அங்கிருந்து பிரச்சார வாகனத்தின் மூலம் கரூர் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது பரமத்திவேலூர் என்ற பகுதிக்குச் சென்றுக் கொண்டிருந்த போது அங்கிருந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். இதனால் விஜய்யின் வாகனம், சாலையை கடந்து செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது. உடனடியாக வாகனத்தை நிறுத்திய விஜய், வாகனத்தின் மேலே ஏறி பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.
வழக்கமாக பிரச்சாரம் செய்யக்கூடிய இடத்தில் மட்டும் தான் வாகனத்தின் மேல் ஏறி பொதுமக்களை சந்தித்துப் பேசுவார். ஆனால், இன்று அதிகளவிலான மக்கள் திரண்டிருந்ததால் முதல் முறையாக திடீரென வாகனத்தின் மேலே மக்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கண்ட தொண்டர்கள், ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர்.