சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே மௌலி (வயது 28) என்ற இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (20.11.2025) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை மயிலாப்பூர் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அதன்படி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கௌதம் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவர் நேற்று (21.11.2025) போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்குப் பிறப்பிக்கப்பட்ட, உத்தரவின்படி இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அதே சமயம் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடியான விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே விஜயகுமார் பதுங்கி இருப்பதாக மயிலாப்பூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் விஜயகுமாரைக் கைது செய்ய அங்குச் சென்றுள்ளனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் தமிழரசன் என்பவரின் இடது கையில் வெட்டி உள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், ரவுடி விஜயகுமாரின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரவுடி விஜயகுமார், காவர் தமிழரசன் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/che-row-vijayakumar-2025-11-22-08-20-54.jpg)