தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரதயாத்திரைப் பயணத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து தனது ரத வாகனத்தில் நின்று பேசி வருகிறார். மேலும், நயினார் நாகேந்திரன் பேசும் முன்பு தமிழ்நாட்டின் அவலம் என்று வீடியோ காட்சிகளும் திரையிடப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் 11-ம் தேதி தஞ்சை மாவட்டத்திலும், 12-ம் தேதி புதன் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் பயண விழா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர் சார்பில் பலமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்துவும் கலந்துகொண்டனர். அறந்தாங்கி வாசி திடலில் நிறுத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தில் தன்னுடன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை நிற்க வைத்து நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

Advertisment

அதில், “மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் அரசுப் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லை என்று இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த அரசு எதையும் செய்யவில்லை. தேர்தல் வந்தால் ஒரு பேச்சு... இல்லை என்றால் ஒரு பேச்சு... இது தான் அவர்கள் மூச்சு. அவர்களின் ஒரே தேவை தன் மகன் துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து 10 அடி தூரத்தில், கூட்டத்தில் நின்ற ஒருவர் "தலைவரே குட்கா பத்தி பேசுங்க" என்று தன் கையில் வைத்திருந்த குட்கா பொட்டலத்தைத் தூக்கிக் காட்டினார். இது பேசிக்கொண்டிருந்த நயினார் நாகேந்திரன், மற்றும் அருகில் நின்ற விராலிமலை விஜயபாஸ்கர், வைரமுத்து உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் முகமும் மாறியது. உடனே குட்கா பொட்டலத்தைத் தூக்கிக் காட்டியவரின் அருகில் நின்றவர்கள், “அண்ணே... இது தப்புண்ணே, கீழே இறக்குண்ணே, அவர் கையப் புடிங்கைய்யா..” என்று கூறிக்கொண்டே குட்கா பொட்டலம் உள்ள கையைக் கீழே இறக்கினர்.

Advertisment

குட்கா வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் மாஜி விஜயபாஸ்கரைப் பிரச்சார வாகனத்தில் வைத்துக்கொண்டே கூட்டத்தில் இருந்து ஒருவர் குட்கா பற்றிப் பேசச் சொல்லி பொட்டலத்தைத் தூக்கிக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.