தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான இன்று (20.09.2025), நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் சென்ற விஜய், திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தனது பிரச்சார வாகனத்தில் ஏறி அமர்ந்து நாகப்பட்டினத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். வழியில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காவல்துறை அனுமதி கொடுத்திருந்த நேரத்தைக் கடந்த நிலையில், மதியம் 1.30 மணிக்கு மேல் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் தனது உரையை நிகழ்த்தினார்.
தொண்டர்கள் முன் ஆற்றிய உரையில், மீனவர்கள், ஈழத் தமிழர்கள், நாகை மாவட்டத்தின் பிரதான பிரச்சனைகள் மற்றும் திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். இதனிடையே, த.வெ.க. தொண்டர்கள் அன்போடு பரிசளித்த வேலையை வாங்கிக்கொண்டார். மேலும், தொண்டர்கள் வழங்கிய புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் பெற்றுக்கொண்டார்.