எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 மற்றும் 6ம் தேதிகளில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்தும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஓரணியில் ஸ்டாலின் குடும்பம்தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை. தமிழக மக்கள் தவித்துப் போய் உள்ளனர். வரவுக்கும் செலவுக்கும் பணம் இல்லை. மக்கள் வெறும் பையுடன் தான் திரிகின்றனர். ஸ்டாலின் குடும்பம்தான் சுபிட்சமாக சந்தோசமாக நன்றாக இருக்கிறது.
அதிமுக பாஜகவுக்கு அடிமைக் கட்சி கொத்தடிமைக் கட்சி என்றுதான் எப்போதும் எதிரணியினர் பேசுகின்றனர். அப்படியென்றால் காங்கிரசுக்கு திமுக அடிமையா? மொழி, இனப் பிரச்சனையை தூண்டுவது திமுகவின் நாடகம். அதிமுகவும் பாஜகவும் விழிப்பாக முழிப்பாக உள்ளது. தமிழக மக்கள் விவரமாக உள்ளனர். திமுகவுக்கு மக்கள் ஆப்பு அடிப்பார்கள். அதிமுக தான் ஜெயிக்கும். காங்கிரசை காலம் முழுவதும் எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அதன் தோளில் உட்கார்ந்து பயணம் செய்வது எந்த விதத்தில் சரியான நியாயம்?
எதிரெதிர் அணியாய் இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் கைகோர்க்கிறது. காலமும் சூழ்நிலையும் சூழ்ச்சியும் மாறும்பொழுது தேசத்தின் நலனுக்காக தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக எடுத்துள்ள முடிவு இது. திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு பெரும் ஆதரவு தான். அடித்தட்டு மக்களின் வாக்குகள் எங்களுக்கு நிறைய கிடைக்கும். எங்களுக்கு மிகப்பெரிய பலம் தான். அதிமுக - பாஜக கூட்டணி ஒவ்வாத கூட்டணி அல்ல. காங்கிரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வைத்துள்ள கூட்டணிதான் ஒவ்வாத கூட்டணி. இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு ஆதரவா இருந்து ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்ற கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக் கொடுத்தது திமுக. முரண்பட்ட கட்சிகள் கொண்ட கூட்டணி திருமாவளவன் வைத்துள்ள கூட்டணி.
தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் தான். மூன்றாவது அணி அமைத்த கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. களத்தில் பேசப்படும் கட்சிகள், பேசப்படுபவர்கள், பிறகு பேசுபொருளாகி விடுவார்கள். அதிமுக, திமுக தவிர்த்து விட்டில் பூச்சிகள் மாதிரி பல கட்சிகள் வரும், ஆனால் தேர்தல் களத்தில் நிற்க முடியாது. அந்தக் கட்சிகளுக்கு பூத் கமிட்டி அமைப்புகள் கூட கிடையாது.
காங்கிரஸ் கட்சியில் ஒரு கூட்டம் போட்டால் யார் வருவார்கள்? 4 கார்கள் வரும், 16 பேர் வருவார்கள். அதிமுகவில் கூட்டம் நடத்தினால் 500 பேர்கள் வருவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆளே கிடையாது. திமுகதான் காங்கிரசை சுமந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி தான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் இந்தியாவிற்கு அப்பால்தான் எடுக்கப்படுகிறது. காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டில் முடிவெடுத்து இந்தியாவில் நிறைவேற்ற பார்ப்பார்கள். எனவே காங்கிரஸ் கட்சி எல்லாம் இனி ஒரு காலமும் கரை சேராது.
பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து என்ற காரணத்தை வைத்து சித்து விளையாட்டு விளையாட கூடாது. அப்படி செய்தால் அதிகாரிகளின் பதவியை ரத்து செய்வோம். பட்டாசு தொழில் செய்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் பாவப்பட்டவர்கள்.
திமுக ஆட்சி, நாலரை வருடத்தில் நாலரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்துகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே அதிருப்தியாக உள்ளது.
நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது. தேர்தலுக்கான காலங்கள் இன்னும் இருக்கிறது. ஒரே நாளில் கட்சியை கலைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். காலம் கிடப்பதால் முடிவுகள் மாறலாம். நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி. அவரை முடிவு எடுக்கவிடாமல், ஏதோ சில சக்திகள் தடுத்தால், அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும்.” என்று பேட்டியளித்தார்.