தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஐந்து குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் இளைஞர் அணியில் வீரவாஞ்சி நகர் சுரேஷ் தலைமையில் ஒரு குழுவும், செக்கடி தெரு சுமங்கல ராஜா தலைமையில் ஒரு குழுவும் இயங்கி வருகிறது. இரண்டு தரப்பும் பதவியை கைப்பற்றுவதற்காக தூத்துக்குடி மாவட்ட த.வெ.க. கட்சி வாட்ஸ் அப் குழுவில் மாறி மாறி பதிவுகளைப் பகிர்ந்து வந்துள்ளனர். இதில் இரு தரப்புக்கும் போட்டி ஏற்படவே, அந்த வாட்ஸ் அப் குழுவில் தனிப்பட்ட விஷயங்களை ஒரு கட்டத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வந்த நிலையில், வீரவாஞ்சி நகர் சுரேஷுக்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் குற்றப் பதிவேடு ஆவணம் பராமரிப்பது தொடர்பாகவும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாகவும், சுமங்கல ராஜா தரப்பைச் சார்ந்த மனோஜ் குமார் என்பவர் நேற்று(ஜூலை 24) இரவு 11 மணியளவில் கட்சி வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரவாஞ்சி நகர் சுரேஷ், மனோஜ் குமாரைத் தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால், அவருக்கு போன் செய்து கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஆர்த்தி மஹால் அருகே வரச் சொல்லியுள்ளார். அங்கு மனோஜ் குமார், சுமங்கல ராஜா, வக்கீல் ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். இரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் முற்றியதால், ஒருவரை ஒருவர் தள்ளி, கற்களை வீசி தாக்கிக்கொண்டு, சாலையில் மல்லுக்கட்டினர். மேலும், செருப்புகளை கழற்றி வீசிக்கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோஷ்டி மோதலைத் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் படுகாயமடைந்த இரு தரப்பைச் சேர்ந்த மனோஜ் குமார், சுமங்கல ராஜா, வக்கீல் ராமமூர்த்தி, சுரேஷ், சதீஷ் குமார் ஆகிய ஐந்து பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் எல்லா நகரங்களிலும், ஒன்றியங்களிலும் மாவட்ட பொறுப்பாளர்களே கோஷ்டிகளை வளர்த்து விடுகின்றனர். எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய மாவட்ட பொறுப்பாளர்கள் ஒவ்வொரு தரப்பிடமும் உனக்குத்தான் பதவி என மாறி மாறி பேசி இளைஞர்களைத் தூண்டிவிட்டு, கோஷ்டி மோதல், போலீஸ் வழக்கு என கிரிமினல் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக துணை போகின்றனர். இதை கட்சி தலைமை உணர்ந்து, கட்சிப் பணிகள் நல்ல முறையில் நடக்க, விரைவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்” என்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு இதுவரை நிர்வாகிகள் முறையாக அறிவிக்கப்படாத சூழலில், பதவிக்கான போட்டி, கட்சி வாட்ஸ் அப் குழுவில் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட்டது தொடர்பாக, தமிழக வெற்றிக்கழக கட்சியினர் நள்ளிரவில் கற்களையும் செருப்புகளையும் வீசி மோதிக்கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி