தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணி குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று (16.11.2025) போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''சேக்கிழாருக்கும் கம்பராமாயணத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு திராவிடம் என்றால் என்னவென்று எப்படி தெரியும் என்ற துணை முதல்வரின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. விஜய் எஸ்.ஐ.ஆர் பற்றிப் பேசுவது கடைசியாக நின்று நானும் ரவுடிதான் என குரல் கொடுக்கற மாதிரி இருக்கு.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என சொல்வார்கள். அதுபோல மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய திட்டங்கள் விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தீட்டப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா என இந்த ஆட்சிக் காலத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதுகுறித்து ஒப்பந்ததாரர்கள்,பொறியாளர்களை அழைத்து வைத்து பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்துகிறோம். அப்படி செய்வது கண்டிப்பு அல்ல அறிவுறுத்தல்'' என்றார். 

Advertisment