கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது துக்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் , சி.எம் சார் பழிவாங்க வேண்டுமென்றால் என்னை பழிவாங்குகள், தொண்டர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று குற்றம் சாட்டினார். உயிரிழப்பு சம்பவங்களுக்கு பொறுப்பேற்காமல், திமுக அரசு மீது விஜய் பழிபோடுவதாக கடும் விமர்சனம் எழுந்தது. மேலும், 1 வாரம் ஆகியும் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தொலைப்பேசி மூலம் விரிவாகப் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்தும், அங்குள்ள நிலைமை குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும் என்பதையும், யாரும் தைரியத்தை இழக்க வேண்டாம் நான் உங்களுடன் உறுதியாக இருக்கிறேன் என்று விஜய் கூறியதாகக் கூறப்படுகிறது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உதவ வேண்டும் என்று அவர் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் எனவும், முழு கவனமும் கரூர் மக்களின் துயரை போக்குவதிலேயே இருக்க வேண்டும் எனவும், கரூர் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்த பிறகே கட்சியின் அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் தொடங்கும் என அவர் மாவட்டச் செயலாளர்களுடன் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த தீர்ப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் எனவும், அந்த தீர்ப்பு நமக்கு உறுதுணையாக இருக்கும் என விஜய் கூறியதாகக் கூறப்படுகிறது. 

Advertisment