தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான இன்று (20.09.2025) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அந்த வகையில் திருவாரூரில் விவசாயிகளைக் குறிக்கும் வகையில் தோளில் பச்சைத் துண்டு அணிந்து த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “எல்லோரும் எப்படி இருக்கீறீர்க்ள் . திருவாரூர் என்றாலே திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆடித் தேர் தான் உடனே மனதில் ஞாபகத்திற்கு வரும். திருவாரூர் தேர் என்றால் சும்மாவா ?. இந்த தேர் இந்த மண்ணின் அடையாளம் ஆகும். ரொம்ப நாள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட்டியது நான் தான் என்று மார்தட்டிச் சொன்னது யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவருடைய மகன் முதலமைச்சர் இப்போது என்ன செய்கிறார். நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நான்கு புறமும் கட்டையைப் போட்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நிறுத்திவிட்டார்.
இதனைப் பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக்கொள்கிறார். திருவாரூர் மாவட்டம் தான் அவர்களின் சொந்த மாவட்டம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் திருவாரூர் கருவாடாகக் காய்கிறது. அதனைக் கண்டு கொள்ளவே மாட்டுகிறார்கள். முதல்வரின் அப்பா பெயரில் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எல்லா இடத்திலும் அவரின் அப்பா பெயரை வைக்கிறீர்கள். ஆனால் அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதியான சாலை வசதி கூட சரியாக இல்லை” எனத் தொடர்ந்து பேசினார்.