'Vijay speaks in ignorance' - Edappadi Palaniswami speech Photograph: (admk)
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகி அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர்-சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.
இறுதியாக கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ''எல்லா அரசியல்வாதிகளும் அறிவாளி கிடையாது. எல்லா சினிமாக்காரர்களும் முட்டாளும் கிடையாது. எம்ஜிஆருடன் பழகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் உடன் பழக. எனக்கு வாய்ப்பு கிடைத்தது அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே. அவரை மறக்க முடியுமா? மக்களாட்சிக்கான அச்சாரத்தை மக்கள் சக்தியை அணியாக நாம் நம்முடன் வைத்திருக்கும் பொழுது இந்த அடிமைக் கூட்டணியில் சேர்வதற்கான அவசியம் நமக்கு எதற்கு?
எம்ஜிஆர் தொடங்கிய கட்சி இப்பொது என்ன நிலையில் யார் கையில் உள்ளது என எல்லோருக்கும் தெரியும். இப்பொழுதும் சொல்கிறேன் நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்களிப்பு செய்யப்படும். 2026 இல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி ஓன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே. ஒரு காலம் வரும் நம் கடமை வரும் அந்த கூட்டத்தை ஒழிப்பேன். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? யாருக்கு எதிராக என்று தான் கேட்கிறீர்கள்? வேறு யாரு மறைமுக உறவுக்காரர்கள் ஆன பாசிச பாஜகவும், பாய்ஸன் திமுகவும் தான்.
மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமைக் கூட்டணி ஒன்று. அடுத்து உங்களுடைய மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக மறைமுக அடிமை குடும்பம் என இன்னொரு கூட்டணி. கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் போயிடலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருக்கிறீர்கள். என்னதான் நீங்கள் நேரடி, மறைமுக கூட்டணி என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரைகளில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்'' என்றார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் பேசுகையில், ''இப்பொழுது அதிமுக யார் கையில் இருக்கிறது என்று சிலர் பேசுகிறார்கள். பாவம் அறியாமையின் காரணமாக பேசுவதாக நான் பார்க்கின்றேன். இது கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கின்றார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.