'Vijay should not support BJP's rooting' - Durai Vaiko interview Photograph: (DURAI VAIKO)
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று (16.11.2025) போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கம்பாக்கம் பகுதியில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட திருச்சி எம்பியும், மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் விஜய்யை பொறுத்தவரை மிகப் பெரிய திரை நட்சத்திரம். அவர் பின்னாடி லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே வேளையில் அரசியல் வேறு சினிமா வேறு. அரசியல் என்பது கடினமான ஒரு பயணம். இதில் வெற்றிபெற வேண்டும் என்றால் நேரடியாக மக்களைச் சந்திக்க வேண்டும்.
அதேவேளையில் இதுபோன்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் அவர் நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவருடைய இயக்கத் தோழர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். கொள்கை விரோதி பாஜக என்றும் விஜய் சொல்லி இருக்கிறார். அந்த மதவாத பாஜகவை வளர்வதற்கோ வேரூன்றுவதற்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் ஆதரவு தெரிவித்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. அவர் ஒரு அரசியல் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். காலப்போக்கில் எல்லாம் தெரியவரும். எனவே அவருடைய கட்சி நடத்தும் போராட்டங்களில் அவர் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். இதனை அந்த இயக்கத்தில் உள்ள பிற நிர்வாகிகள் அவரிடம் செல்ல வேண்டும். நான் சொல்லக்கூடாது நான் இன்னொரு இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் அதைச் சொல்லக்கூடாது'' என்றார்.
Follow Us